வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

மதுரையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங் களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகர் முழுவதும் 300 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

Update: 2022-01-06 15:01 GMT
மதுரை, 
மதுரையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங் களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகர் முழுவதும் 300 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
 தீவிர விசாரணை
கொரோனா 3-ம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கை அறிவித் துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அதனை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
அவ்வாறு மதுரையில் இரவு நேர ஊரடங்கை கண்காணிக்க மாநகர போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதில் நகருக்குள் வரும் 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். 
ரோந்து
அது தவிர நகருக்குள் முக்கிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு அங்கும் வாகன சோதனை செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தும், ஒரு சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
 மேலும் நகருக்குள் பொதுமக்களை கண்காணிக்க ஒரு போலீஸ் நிலையத்திற்கு 2 சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றுபவர்களை பிடித்து விசாரித்து உரிய காரணமின்றி செல்பவர்கள் மீது வழக்கு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு முதல் நாள் ஊரடங்கான நேற்று இரவு நகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் இருந்தனர். 
எச்சரிக்கை
அப்போது ஊரடங்கை மீறியவர்களிடம் முதல் நாள் என்பதால் பலரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்