புழல் ஏரிக்கரை அருகே பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை
புழல் ஏரிக்கரை அருகே பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டர் குத்திக்கொலை
செங்குன்றத்தை அடுத்த அலமாதி விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 31). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை 3 பேர் கொண்ட கும்பல் புழல் ஏரிக்கரை அருகே ஏழுமலையை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், கொலையான ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பழிக்குப்பழியாக...
பின்னர் இந்த கொலை தொடர்பாக சென்னை மூலகொத்தலத்தைச் சேர்ந்த புவிலன்(30), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரபீக் (25), ஆனந்தராஜ் (31) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதான ஆனந்தராஜின் அண்ணன் கார்த்திக் என்பவர் 2019-ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு மூலகாரணமாக இருந்தவர் ஏழுமலை என்பதால் தனது அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆனந்தராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏழுமலையை தீர்த்துக்கட்டியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனார். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.