திருமணம் செய்வதாக ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பாலியல் உறவு; பல்கலைக்கழக ஊழியர் கைது
திருமணம் செய்வதாக ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பாலியல் உறவு வைத்த பல்கலைக்கழக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பல்கலைக்கழக ஊழியர்
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி (வயது 30-பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாற்றுத்திறனாளியான இவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறேன். நான் வேலை செய்யும் அதே பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை செய்பவர் அருண்கிஷோர் (வயது 32). இவரும் என்னைப்போல மாற்றுத்திறனாளிதான். இருவரும் அடிக்கடி பேசுவோம். பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் காதலித்தோம். அவர் என்னை திருணம் செய்து கொள்வதாக சொன்னார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
பாலியல் உறவு
ஒரு நாள் அருண்கிஷோர் எனது வீட்டிற்கு வந்தார். நான் அப்போது தனிமையில் இருந்தேன். நாம்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோமே, நமக்குள் எதற்கு இடைவெளி, பாலியல் ரீதியாக நாம் உறவு வைத்துக்கொள்ளலாம், என்று என்னை வற்புறுத்தினார்.
நான் மறுத்த போதும், அவர் என்னுடன் பாலியல் உறவு கொண்டார். பலமுறை இந்த உறவு நீடித்தது. அதற்கு பின்னர், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதை உறுதிபடுத்தும் வகையில், அருண்கிஷோர் என்னுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். திருமணம் செய்து கொள்ளவும் மறுக்கிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சுந்தரி புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
கைது
இந்த புகார் மனு தொடர்பாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அடையாறு பகுதியைச் சேர்ந்த அருண்கிஷோர் நேற்று கைது செய்யப்பட்டார்.