பெங்களூரு அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்து பெண் தற்கொலை
பெங்களூரு அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
குழந்தைகளுடன் தீக்குளித்தார்
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி சந்தியா (வயது 33). இந்த தம்பதிக்கு 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. 4 வயது மற்றும் 2 வயதில் குழந்தைகள் இருந்தது. ஸ்ரீகாந்த் தனது மனைவி, பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நேற்று ஸ்ரீகாந்த், அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தார்கள்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சந்தியா தன் மீதும், தனது 2 குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றியதாக தெரிகிறது. பின்னர் சந்தியா, குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதனால் 3 பேரின் உடல்களிலும் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ வீடு முழுவதும் பரவி எரிந்தது. இதை பார்த்து அதிாச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வீட்டில் பிடித்த தீயை அணைத்தார்கள்.
3 பேரும் சாவு
மேலும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய சந்தியா, அவரது குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தியா தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்திருந்ததும், இதற்காக 5 லிட்டர் பெட்ரோல் வாங்கி இருந்ததும் தெரியவந்தது. மேலும் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை முடிவை எடுத்தார்? என்பது தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.