கல்லூரி மாணவர் மர்ம சாவு
அஞ்சுகிராமம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கல்லூரி மாணவர் வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கல்லூரி மாணவர் வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதலுக்கு எதிர்ப்பு
அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவருடைய மகன் சுமன் (வயது 19). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதல் விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்த அவர் சம்மதத்தையும் கேட்டுள்ளார். படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்ல வேண்டும், அதன்பிறகு திருமணத்தை பற்றி சிந்திக்கலாம் என கூறிய அவர்கள், அதுவரை காதலை பற்றி நினைக்கக்கூடாது என காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
மாணவர் சாவு
இதனால் சுமன் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டில் சாப்பிட்ட சுமன், பின்புறம் உள்ள பழைய வீட்டில் தூங்க செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நேற்று காலையில் அந்த வீட்டின் தரையில் சுமன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுமன் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்ற விவரம் தெரியும் என தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.