அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
பொங்கலை முன்னிட்டு அய்யம்பேட்டை பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அய்யம்பேட்டை:
பொங்கலை முன்னிட்டு அய்யம்பேட்டை பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை
தமிழகம் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை தான் கடைவீதிகளில் முக்கியத்துவம் பெறும்.
கரும்பு சாறில் இருந்து தயாராகும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவை உடலுக்கு உறுதியை தரும் உணவு பொருளாக பயன்படுகிறது. நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு அச்சு வெல்லத்திற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி
இதனால் கரும்பு விவசாயிகள் இரவு, பகலாக அச்சு வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் அய்யம்பேட்டையை சுற்றியுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதிஅக்ரஹாரம், மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் தயார் செய்யப்படுகிறது.
தற்போது அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சி.ஓ.-32 ரக கரும்பு
இதுகுறித்து மாகாளிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறியதாவது:-
அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக சி.ஓ-32 என்ற ரக கரும்பினை சாகுபடி செய்துள்ளோம். இந்த கரும்பினை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அறுவடை செய்ய தொடங்குவோம்.
இந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக கடந்த டிசம்பர் மாத மத்தியில் தான் கரும்பு அறுவடை செய்ய தொடங்கினோம். இந்தநிலையில் மீண்டும் இந்த பகுதியில் மழை பெய்ய தொடங்கியதால் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இப்போது மழை ஓய்ந்த பின்னர் கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு ஏக்கர் கரும்பில் இருந்து 160 சிப்பம் (ஒரு சிப்பம்-30கிலோ) வெல்லம் தயாரிக்கலாம். பழங்காலத்தில் மாடுகளை பயன்படுத்தி கரும்பிலிருந்து சாறு பிழிந்து எடுத்து வெல்லம் தயாரித்தனர்.
ஒரு சிப்பம் ரூ.1500 வரை
தற்போது மின்சார மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின் ஆகியவற்றை கொண்டு சாறு எடுத்து வெல்லம் தயார் செய்கிறோம். அச்சு வெல்லத்திற்கு நல்ல சுவையை பக்குவம் தான் நிர்ணயிக்கிறது. கரும்பு சாற்றுடன் காய்ச்சினால் தான் நல்ல சுவையான அச்சுவெல்லம் கிடைக்கும்.
ஒரு நாளில் 500 முதல் 1500 கிலோ வரை அச்சுவெல்லம் தயாரிக்கலாம். அச்சுவெல்லத்தின் நிறத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.1500 வரையில் விற்பனை ஆனால் தான் ஒரளவாது லாபம் கிைடக்கும்.
பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி
உரவிலை, டீசல்விலை, அச்சு வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை, கூலியாட்கள் சம்பளம் இவைகள் கடந்த காலங்களில் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் வெல்லத்தின் தற்போதைய கொள்முதல் விலை நிலவரம் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆலை கொட்டகைகளை விவசாயிகள் மூடிவிட்டு, தனியார் கரும்பு வியாபாரிகளிடம் கரும்புகளை விற்று வருகின்றனர். இங்கு தயாராகும் வெல்லம் கரூர், பழனி, மதுரை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
மற்ற மாவட்டங்களில் தயாராகும் அச்சு வெல்லத்தை விட இங்கு தயாராகும் அச்சுவெல்லம் சுவை நன்றாக இருக்கும். அதனால் தான் அனைவரும் இங்கு தயாராகும் அச்சு வெல்லத்தை விரும்பி வாங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.