தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா ருத்திரசிந்தாமணி ஊராட்சி பகுதியில் பழுக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கோரியக்கொல்லை பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி இல்லாததால் மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மண் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும். -ராதாகிருஷ்ணன், பழுக்காடு.
பள்ளம் மூடப்படுமா?
தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் ரெட்டிபாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வாகனங்களில் வருவோர் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஈஸ்வரிநகர், பொதுமக்கள்.
பாதாள சாக்கடைகுழி மூடி சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் 4-வது வார்டில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழியின் மூடி உடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும், மாணவ-மாணவிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை குழியை பொதுமக்கள் செங்கல், மரக்கட்டைகள்கொண்டு தற்காலிகமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி உடைந்த பாதாள சாக்கடைகுழி மூடியை அகற்றிவிட்டு புதிய மூடி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மேலக்காவேரி பொதுமக்கள், கும்பகோணம்.