வேலூர் மாவட்டத்தில் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 93 ஆயிரத்து 448 வாக்காளர்கள் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 93 ஆயிரத்து 448 வாக்காளர்கள் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 1-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பட்டியலில் இடம் பெறாதவர்கள் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியற்றுக்காக நவம்பர் 1-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 6 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது.
752 மனுக்கள் நிராகரிப்பு
அதன்படி வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து பெயர் சேர்க்க 24,884 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 24,506 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 378 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பெயர் நீக்கம் செய்ய 8,125 மனுக்கள் பெறப்பட்டு 8,047 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 78 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பெயர் திருத்தம் மேற்கொள்ள 3,679 மனுக்கள் பெறப்பட்டு 3,451 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 228 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும், முகவரி மாற்றம் செய்ய 2,539 மனுக்கள் பெறப்பட்டு 2,471 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 68 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
மொத்தம் 39,227 மனுக்கள் பெறப்பட்டு அதில் 38,475 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 752 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
13 லட்சம் வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12 லட்சத்து 93 ஆயிரத்து 448 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதனை www.nvspin என்ற இணையதள முகவரியிலும் பார்க்கலாம்.
நாளை (இன்று) முதல் தொடர் சுருக்க திருத்த முறை அமல்படுத்தப்படுவதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள படிவங்கள் அளிக்க விடுப்பட்ட நபர்கள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக படிவங்களை அளிக்கலாம். மேலும், படிவங்களை voter helpline என்ற செயலி, www.nvspin இணையதள முகவரி மூலமாகவும் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.