தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நல்லறிக்கை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், குன்னம், பெரம்பலூர்.
துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு போதுமான வசதிகள் இல்லாததால் இந்த துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன் , அகரம்சீகூர், பெரம்பலூர் .
தெருவிளக்கு அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல் சரவண பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள தஞ்சாவூர் -புதுக்கோட்டை பிரதான சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் ஒரே இருட்டாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் நோயாளிகள், டாக்டர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், புதுக்கோட்டை
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம் குளித்தலை - திருச்சி மாவட்டம் முசிறியை இணைக்கும் தந்தை பெரியார் பாலத்தின் (காவிரிபாலம்) நுழைவு வாயிலில் மின்கம்பம் ஒன்று மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தர், குளித்தலை, கரூர்
குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் கிராமம் அண்ணா நகர் பகுதியில் ஊராட்சி சார்பில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு ரூ.8 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்
குண்டும் குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம்-வேம்பலில் உள்ள சில்லாம்பட்டி விலக்கு சாலையில் இருந்து நாகரத்தினம்பிள்ளை வரை சுமார் 7 கிலோ மீட்டர் வரை உள்ள சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சில நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பன், சில்லாம்பட்டி, புதுக்கோட்டை