திண்டிவனம் அருகே நகை மதிப்பீட்டாளர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை, பணம் திருட்டு
திண்டிவனம் அருகே நகை மதிப்பீட்டாளர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 41). இவர் ஆவணிப்பூரில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி காமாட்சி. இவர்கள் வீட்டில் இருந்த பீரோவில் 23 பவுன் தங்க நகைகள், 45 ஆயிரம் பணத்தை வைத்திருந்தனர். இந்த நிலையில் பீரோ சாவி தொலைந்து போய்விட்டது.
இதையடுத்து வேறு வழியின்றி, பீரோ பூட்டை உடைத்து நகை, பணத்தை ஒரு டிபன் பாக்சில் வைத்து, அதை தனது குழந்தையின் பள்ளிக்கூட பேக்கின் உள்ளே வைத்து பூட்டினர். பின்னர் அந்த பையை, பித்தளை அண்டாவின் உள்ளே வைத்து மறைத்து வைத்திருந்ததாக கூற்படுகிறது.
திருட்டு
சம்பவத்தன்று அண்டாவை பார்த்த போது, அங்கு பையில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம மனிதர்கள் நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.7½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துவேல் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.