போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி
பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்
பொள்ளாச்சி கோட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக ஒரே பஸ்சில் பணிபுரிந்தவர்களை திடீரென்று நிறுத்தியதை கண்டித்தும் நேற்று பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக கிளை-1 முன்பு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மண்டல தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் வேளாங்கண்ணிராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காத்திருப்பு போராட்டம்
இதற்கிடையில் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தொழிற்சங்கத்தினர் திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றாததால் போக்குவரத்து கழக கிளை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மேலும் இரவு இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு தங்குவோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.