தேனி மாவட்டத்தில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 446 வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், தேனி மாவட்டத்தில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர்.
தேனி:
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், தேனி மாவட்டத்தில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டார். அதை பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின் படி தேனி மாவட்டத்தில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, 5 லட்சத்து 55 ஆயிரத்து 945 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 79 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், 208 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
தொகுதி வாரியாக...
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,37,351 ஆண் வாக்காளர்கள், 1,41,169 பெண் வாக்காளர்கள், 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,78,555 வாக்காளர்களும், பெரியகுளம் தொகுதியில் 1,40,897 ஆண் வாக்காளர்கள், 1,46,797 பெண் வாக்காளர்கள், 113 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,87,807 வாக்காளர்களும் உள்ளனர்.
போடி தொகுதியில் 1,36,542 ஆண் வாக்காளர்கள், 1,43,314 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,79,878 வாக்காளர்களும், கம்பம் தொகுதியில் 1,41,155 ஆண் வாக்காளர்கள், 1,48,013 பெண் வாக்காளர்கள், 38 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,89,206 வாக்காளர்களும் உள்ளனர்.
விவரங்களை சரிபார்க்கலாம்
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்பு கலெக்டர் முரளிதரன் கூறுகையில், "இந்த பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் இதை பார்வையிட்டு விவரங்களை சரிபார்க்கலாம். மேலும் 1-1-2022-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசண்முகம் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.