முல்லைப்பெரியாறு அணை குறித்து கவர்னர் உரை; தேனியில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முல்லைப்பெரியாறு அணை குறித்து கவர்னர் உரையாற்றியதை வரவேற்று, தேனியில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-01-05 16:04 GMT
தேனி:
தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. கவர்னர் உரையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றன. அதில், முல்லைப்பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிக்கு நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கூறினார். இந்த அறிவிப்பு முல்லைப்பெரியாறு அணையின் மூலம் பாசன வசதிபெறும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தேனி பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்துக்கு தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிராஜ் தலைமை தாங்கினார். கவர்னர் உரையில் இடம்பெற்ற முல்லைப்பெரியாறு அணை குறித்த விவரத்தை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி அவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்