நினைவுத்தூண் அமைக்க ராணுவ அதிகாரிகள் ஆய்வு
நினைவுத்தூண் அமைக்க ராணுவ அதிகாரிகள் ஆய்வு
குன்னூர்
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஹெலிகாப்டர் விபத்து
கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 8-ந் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அவர்கள் குன்னூரை அடுத்த நஞ்சப்பசத்திரம் கிராமம் அருகே சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் பிபின் ராவத் உள்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப்பகுதி ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பாகங்கள் மீட்பு
பின்னர் ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர் இணைந்து உடைந்த ஹெலிகாப்டர் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பாகங்கள் மீட்கப்பட்டு சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பலர் அங்கு வந்து விபத்து நடந்த இடத்தில் பிபின் ராவத் உள்பட 14 பேருக்கும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அதிகாரிகள் ஆய்வு
மேலும் விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அதிகாரிகள் நேற்று விபத்து நடந்த இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் எந்த பகுதியில் நினைவுத்தூண் அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அத்துடன் நினைவுத்தூண் அமைக்க அளவீடும் செய்யப்பட்டது. எனவே அங்கு விரைவில் நினைவுத்தூண் அமைக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.