ஈரோடு மாவட்டத்தில் 7½ லட்சம் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் 7½ லட்சம் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 7½ லட்சம் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசி பருப்பு, நெய், மஞ்சள் தூள் உள்பட மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
ஈரோடு கருப்பணன் வீதியில் உள்ள ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விலையில்லா வேட்டி-சேலைகள்
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட் டத்தை முதல்-அமைச்சர் அறிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,159 ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.
21 பொருட்கள் மட்டுமின்றி விலையில்லா வேட்டி-சேலைகளும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.7 கோடியே 2 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்று (அதாவது நேற்று) மட்டும் 10 ஆயிரத்து 198 ரேஷன்கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
விழாவில் மாவட்ட உரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு, இணைப்பதிவாளர் கே.ரேணுகா, துணை பதிவாளர்கள் கந்தசாமி, நர்மதா, காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.