சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
சேலம்:-
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணி ஒருவருக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
சேலம் புதிய பஸ் நிலையத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்துள்ளார்களா? என்று ஆய்வு நடத்தினார். பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு முககவசம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் பஸ் நிலையத்துக்கு முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் முககவசம் கொடுத்ததுடன், அவர்களிடம் கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராஜ், சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆலோசனை கூட்டம்
தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறிகள், நோய் பரவும் விதத்தினை கண்டறிந்து தற்காத்து கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையம், உழவர்சந்தை, ஓட்டல், தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றும் நகைகடைகளில் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கண்காணிப்பு பணிகள்
மண்டல அளவில் கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொற்று பாதித்தவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான மருந்துவ ஆலோசனைகள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர நல அலுவலர் யோகானந்த், மாநகர பொறியாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.