கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்த என்ஜினீயர் பிணமாக மீட்பு
கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்த என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார்.
தா.பழூர்:
என்ஜினீயர்
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த வள்ளுவர் - சித்ரா தம்பதியின் மகன் கவுதம்(வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணை விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி இவரும், இவருடன் வேலை பார்த்த திண்டுக்கல் மாவட்டம் கள்ளுக்கோட்டையை சேர்ந்த லோகநாதன், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த விஜயகுமார், வாழப்பாடியை சேர்ந்த கதிர்வேல், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அஸ்வின் ஆகியோரும் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றில் இருக்கும் திட்டுப்பகுதியில் அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து கரைப்பகுதிக்கு வருவதற்கு ஆற்றில் நடந்து வந்தனர். அப்போது கவுதம் ஆழமான பகுதி இருப்பது தெரியாமல் ஆற்றில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட மற்ற 4 பேரும் ஆற்றின் கரை வழியாக ஓடிச்சென்று அவரை மீட்க முயன்றனர். ஆற்றில் தண்ணீர் வேகமாக சென்றதால் கவுதம் அடித்துச் செல்லப்பட்டார்.
பிணமாக மீட்பு
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 2 நாட்களாக காலை முதல் இரவு வரை அவரை ஆற்றில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்புப் படை அலுவலர் மோகன் ராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் கொள்ளிடம் ஆற்றில் கவுதம் தவறி விழுந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது ஆற்றில் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று காலை மதனத்தூர் கிராம மக்கள் ஆற்றின் கரையோரப் பகுதியில் சென்றபோது கரையில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு மணல் திட்டின் மீது கவுதமின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கவுதமின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து கவுதமின் உடலை கைப்பற்றிய தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து கவுதமின் தந்தை வள்ளுவர் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.