பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
தோகைமலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தோகைமலை,
அதிகாரிகள் திடீர் ஆய்வு
தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தின்பண்டங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்து வருவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ரூ.33 ஆயிரம் அபராதம்
அப்போது பேக்கரி கடைகளில் தின்பண்டங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து 11 பேக்கரி கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.