சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை

முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள், மண்டபங்கள், பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2022-01-04 18:21 GMT
திருவண்ணாமலை

முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள், மண்டபங்கள், பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

 ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வியாபார சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டமும், தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:- 
வணிக வளாகங்கள், கடை வீதிகள், பஸ்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் அதிகளவில் இருப்பதை காணமுடிகிறது.

வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் அதிகாரிகள் அடங்கிய 54 குறுவட்ட அளவிலான அமலாக்க குழுக்கள், நகராட்சி ஆணையர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய 4 நகராட்சி குழுக்கள், பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் சுகாதார ஆயவாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் அடங்கிய 10 பேரூராட்சி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வியாபார பகுதிகளிலும் முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

 அதிகளவு வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் அனுமதிக்கக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்தே பொது இடங்களுக்கு வர வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

 நடவடிக்கை 

முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள், மண்டபங்கள், பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாகாளிஸ்வரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) செல்வகுமார், பிரியாராஜ், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்