சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தீவிரமாக கடைபிடிக்க உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்திட முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இநத்நிலையில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோன்று புதிய வகை வைரஸ் நோய் தொற்று பாதித்த நபருடன் நேரடி தொடர்பில் இருந்த மூன்று நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கட்டுக்குள் இருந்து வந்த நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க அனைத்து தாசில்தார்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், சுகாதார துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்படும்
பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
இதுவரை முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் கட்டாயம் நோய் தொற்றுக்கு ஆளாகி கடுமையான பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெளியில் செல்லும் அனைத்து பொதுமக்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், உணவகங்களுக்கு அபராதம் மற்றும் சீல் வைக்கப்படும்.
இந்த நடைமுறைகளை அனைத்து உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையினர் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப் படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். ஆகவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.