மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் திருவாடானையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி
மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் திருவாடானையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருவாடானையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சேதுராமு, தாலுகா துணை செயலாளர்கள் சந்தனம், சோனைமுத்து, சகாதேவன், தாலுகா துணை தலைவர்கள் போஸ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மயில்வாகனன், தாலுகா செயலாளர் தோட்டாமங்கலம் ராசு, பொருளாளர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இழப்பீடு
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 2020-21-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கு வழங்கப்பட வேண்டிய பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019-20-ம் ஆண்டு 25 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டை மறு ஆய்வு செய்து 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தற்போது 2021-ம் ஆண்டு தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான முறையில் வருவாய்த்துறையும் வேளாண்மைத் துறையும் கணக்கெடுத்து ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.