கடன் தொகையை செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ 3500 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி செயலாளர் கைது போலீசாரிடம் இருந்து தப்பிக்க கழிப்பறைக்குள் வீசிய பணமும் மீட்பு
அரூரில் கடன் தொகையை திருப்பி செலுத்தியதற்கான சான்றிதழை வழங்க விவசாயியிடம் ரூ3500 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க கழிப்பறைக்குள் வீசிய பணமும் மீட்கப்பட்டது.
அரூர்:
அரூரில் கடன் தொகையை திருப்பி செலுத்தியதற்கான சான்றிதழை வழங்க விவசாயியிடம் ரூ3500 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க கழிப்பறைக்குள் வீசிய பணமும் மீட்கப்பட்டது.
டிராக்டர் கடன்
தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ்பாட்சாபேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவர் டிராக்டர் வாங்குவதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ.63 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடன் தொகையை அவர் பல்வேறு தவணைகளில் மீண்டும் செலுத்தி விட்டார்.
இந்த நிலையில் வேறு ஒரு வங்கியில் கடன் வாங்குவதற்காக நாகராஜ் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு கூட்டுறவு வங்கியில் டிராக்டர் வாங்கிய கடன் செலுத்தியதற்கான சான்றிதழ் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
உடனே நாகராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கிக்கு சென்று கடன் தொகையை செலுத்தி முடித்ததற்கான சான்றிதழ் கேட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த வங்கி செயலாளரான முருகன் (வயது 50) கடன் தொகையை செலுத்தியதற்கான சான்றிதழை தர வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ், ரூ.3,500 லஞ்சமாக கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
கழிவறை குழாயில் பணம்
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி நாகராஜ் ரசாயன பவுடர் தடவிய ரூ.3,500-ஐ எடுத்துக்கொண்டு நேற்று கூட்டுறவு வங்கிக்கு வந்தார். அங்கு வங்கி செயலாளர் முருகனிடம் அந்த பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வங்கிக்குள் அதிரடியாக நுழைந்தனர். முருகனிடம் லஞ்சம் பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது லஞ்சமாக பெற்ற ரூ.3,500 முருகனிடம் இல்லை.
இதுகுறித்து முருகனிடமும் துருவித்துருவி போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த முருகன், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். லஞ்ச பணம் குறித்து போலீசார் கேட்ட போது, போலீசாரை கண்டதும் தப்பிக்க 3,500 ஆயிரம் ரூபாயை கழிப்பறை கோப்பைக்குள் வீசி தண்ணீர் ஊற்றிய அதிர்ச்சி தகவலையும் போலீசாரிடம் கூறினார்.
வங்கி செயலாளர் கைது
உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் கழிப்பறை கோப்பையை தோண்டினர். அங்கு குழாயில் சிக்கியபடி இருந்த ரூ.3,500-ஐ மீட்டனர்.
இதுதொடர்பாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார், வங்கி செயலாளர் முருகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விவசாயியிடம் ரூ.3,500 லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.