உயிர் தப்பிய புதுமண தம்பதி
கொடைக்கானலில், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் புதுமண தம்பதி உயிர் தப்பினர்.
கொடைக்கானல்:
விருதுநகர் வேலுச்சாமி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). அவருடைய மனைவி கிருத்திகா (24). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் தேனிலவுக்காக புதுமண தம்பதி, நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். நேற்று பகலில் அவர்கள் தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
கொடைக்கானல் பில்லிஸ் வில்லா தெருவில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து புகை வந்தது. இதனைக்கண்ட புதுமண தம்பதி அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கினர். சிறிதுநேரத்தில் மோட்டார் சைக்கிள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தேனிலவுக்கு வந்த புதுமண தம்பதியின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.