தாராபுரம்,
தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர் பகுதியில் அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 2,197 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தாராபுரத்தில் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் தேன்மொழி தலைமையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் டெக்னீசியன்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் மாணவிகளுக்கு பெற்றோர் அனுமதியுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் 10-ம் வகுப்பு மாணவிகள் 333 பேருக்கும், பிளஸ்-1 மாணவிகள் 450 பேருக்கும், பிளஸ்-2 மாணவிகள் 424 பேருக்கும் என மொத்தம் 1207 முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுபோன்று தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 500 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவிகளுக்கு கை கழுவும் சானிடைசர் வழங்கப்பட்டு, முக கவசம் அணிவித்து சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
2,197 மாணவ-மாணவிகள்
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் 148 மாணவ-மாணவிகளுக்கும், வெள்ளகோவில் டி.ஆர்.நகர் அரசு உயர்நிலை பள்ளியில் 41 மாணவ-மாணவிகளுக்கும், புதுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் 93 மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 282 மாணவ-மாணவிகளுக்கு நேற்று 2-ம் நாளாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2-வது நாளாக நேற்று காலை நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறை டாக்டர்கள். பிரசாத்தாமரைக்கண்ணன், மார்கினி, வினோதினி, நவீனா, சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான மருத்துவ செவிலியர் குழுவினர் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ் 2 படிக்கும் 208 மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் பள்ளி தலைமையாசிரியர் ஜி.வேல்முருகன், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்படி தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர் பகுதியில் மொத்தம் 2,197 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.