நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து 2 இடங்களில் விவசாயிகள் சாலைமறியல்
ஒரத்தநாடு அருகே நெல்கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து 2 இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே நெல்கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து 2 இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்கொள்முதல்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கடந்த 3 வாரங்களாக சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் அருகே வெட்ட வெளியிலும், சாலை ஓரங்களிலும் குவியல், குவியலாக குவித்து வைத்துள்ளனர்.
நேற்று காலை வரை நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நெல்லை விற்பனை செய்வதற்காக நெல் மூட்டைகளுடன் சாலையின் ஓரங்களில் கொட்டும் மழை மற்றும் பனியில் இரவு, பகலாக விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். மேலும் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதமடைந்தும் வருகிறது.
சாலைமறியல்
இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாக திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் நேற்று காலை ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது முளைத்து சேதமடைந்த நெல்லை சாலையில் வைத்து இருந்தனர்.
இதேபோல் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் மேலஉளூர் கிராமத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சேதமடைந்த நெல்களை டிராக்டர் டிப்பரில் ஏற்றிக்கொண்டு வந்து சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
போக்குவரத்து பாதிப்பு
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.