காதலன் பெற்றோர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுக்கும் காதலன்-பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-03 20:05 GMT
தஞ்சாவூர்:
காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுக்கும் காதலன்-பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பெண் தர்ணா
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சில்லத்தூரை சேர்ந்த கருப்பையா மகள் சூர்யா(வயது 20) என்பவர் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக அழைத்து சென்றனர். அங்கு அவர் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
 பாலியல் பலாத்காரம்
நான் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். நானும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த சில ஆண்டாக காதலித்து வந்தோம். அவர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது வீட்டில் தனியாக இருந்தபோது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நான் மறுத்தபோதும் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
திருமணம் செய்ய மறுப்பு
இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதால் நான் கூறவில்லை. பின்னர் நான் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டேன். அங்கும் அவர் வந்து என்னுடன் பலமுறை தனிமையில் இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சென்றார். 
அதன்பின்னர் என்னிடம் பேசுவதையும் தவிர்த்தார். இதுகுறித்து கேட்டபோது  திருமணம் செய்ய முடியாது என்று கூறியதுடன் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். நான் உயிருக்கு பயந்து வந்து விட்டேன்.
நடவடிக்கை 
இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்களிடம் கூறியதின் பேரில் அவர்கள் 2 பேரையும் அழைத்து விசாரித்ததில் என்னை திருமணம் செய்து அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் தற்போது என்னையும், எனது குடும்பத்தையும் காலி செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். 
எனவே என்னை காதலித்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுக்கும் வாலிபர் மற்றும் அவரது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்