2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-01-03 19:53 GMT
தா.பழூர்:

மருந்து கடை ஊழியர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மெக்கேல்பட்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் கூழாட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்த மரியபாக்கியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் தா.பழூரில் உள்ள தனியார் மருந்து கடையில் வேலை செய்யும் மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கத்தின் மகன் விஜய் ஆனந்த் (வயது 29) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். இரவில் வேலை முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் ஆனந்த் உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரூ.30 ஆயிரம் திருட்டு
பின்னர் வீடு முழுவதும் ஏதாவது திருட்டு போய் இருக்கிறதா? என்று பார்த்தபோது, 2 நாட்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த சம்பளம் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜய் ஆனந்த் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்(65). திருச்சி பாய்லர் ஆலை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் திருச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த 1-ந் தேதி சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிற்குள் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அமிர்தலிங்கம் இது குறித்து தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்