சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்

நெல்லையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-03 18:46 GMT
நெல்லை:
நெல்லையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் 15 வயதிற்கு மேல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போடும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.
கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழக போக்குவரத்துறை அமைச்சரும், தி.மு.க. தேர்தல் பிரிவு தலைவருமான அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா‌ தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 11 கல்வி வட்டாரங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகள் என மொத்தம் 309 பள்ளிகளில் 57 ஆயிரத்து 307 பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் முதற்கட்டமாக 51 பள்ளிகளில் 12 ஆயிரத்து 434 பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் 2 மத்திய அரசு பள்ளிகளில் தலா 125 மாணவ-மாணவிகளுக்கும், 127 அரசு பள்ளிகளில் 6 ஆயிரத்து 513 மாணவர்களுக்கும், 9 ஆயிரத்து 42 மாணவிகளுக்கும், 143 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 ஆயிரத்து ‌471 மாணவர்களுக்கும், 10 ஆயிரத்து 787 மாணவிகளுக்கும், 39 பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 ஆயிரத்து 113 மாணவர்களுக்கும், 2 ஆயிரத்து 366 மாணவிகளுக்கும், 146 தனியார் பள்ளிகளில் 9 ஆயிரத்து 634 மாணவர்களுக்கும், 7 ஆயிரத்து 131 மாணவிகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

51 குழுக்கள்

தடுப்பூசி செலுத்துவதற்கு 51 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு தரவு உள்ளீட்டாளரும் உள்ளனர். மேலும், அவர்களுக்கு தனியாக கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகளும், அரசு மருத்துவமனையில் 160 படுக்கைகளும், கொரோனா சேவை மையங்களில் 150 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

மாவட்டத்தில் வரும் காலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று யாருக்கும் இல்லை. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இயக்குவதற்கு 20 ஆயிரம் பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. இதில் 17 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும். பஸ்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை

தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், நெல்லை சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கணேஷ்குமார் ஆதித்தன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணலீலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செயல்வீரர்கள் கூட்டம்

தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுப.சீதாராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து நிறைவேற்றி வருவதால் மக்கள் இந்த ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள். இதனால் தான் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 98 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். அதுபோன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். இதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.ராஜூ, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்