தடையை மீறி காங்கிரசார் போராட்டம்
தேங்காப்பட்டணம் அருகே தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் அருகே தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
தேங்காப்பட்டணம் அருகே இனயம்புத்தன்துறை தொழிக்கோடு கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதையை சிலர் முள்வேலி போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக தெரிகிறது.
ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் உள்ள முள் வேலியை அகற்ற வலியுறுத்தி தொழிக்கோடு சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்தார். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை எனத்தெரிகிறது.
53 பேர் கைது
இருப்பினும் நேற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் தொழிக்கோடு சந்திப்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மேற்கு மாவட்ட பொது ெசயலாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 53 பேரை போலீசார் கைது செய்து தேங்காப்பட்டணம் அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும், தடையை மீறி உண்ணாவிரதம் மேற்கொண்டதாக 53 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மறியல்
பின்னர் திருமண மண்டபத்துக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சென்று காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பிரச்சினையில் முடிவு எட்டாதவரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது சில காங்கிரஸ் தொண்டர்கள் மண்டபத்தில் இருந்து வெளியேறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. உடனே, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மற்றும் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.