வேலூரில் சரக்கு ரெயிலில் அடிபட்டு 2 மாடுகள் பலி

சரக்கு ரெயிலில் அடிபட்டு 2 மாடுகள் பலி

Update: 2022-01-03 18:27 GMT
வேலூர்

காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. மாலை 5 மணியளவில் வேலூர் டவுன் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாடுகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தன. அவை ரெயில் என்ஜினின் அடிப்பகுதியில் சிக்கி கொண்டன. 

இதையடுத்து டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதுகுறித்து டிரைவர், காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே ஊழியர்கள் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து, ரெயிலின் அடிப்பகுதியில் சிக்கி உயிரிழந்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் 2 மாடுகளும் வெளியே எடுக்கப்பட்டன. 

சரக்கு ரெயில் நடுவழியில் நின்றதால் வேலூர்-பெங்களூரு சாலை கொணவட்டத்தில் உள்ள ரெயில்வே கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சரக்கு ரெயில் அங்கிருந்து சென்றதும் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். சரக்கு ரயில் நடுவழியில் நின்றதால் திருப்பதி- விழுப்புரம் பயணிகள் ரெயில் ஒருமணி நேரம் தாமதமாக வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

மேலும் செய்திகள்