முதல் நாளில் 6,100 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் நாளில் 6,100 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
ராமநாதபுரம்,
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் நேற்று முதல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்டங்களில் 61 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று சுமார் 6 ஆயிரத்து 100 மாணவ-மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் 61 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என ராமநாதபுரம் சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.