பொங்கல் கரும்புகளை அறுவடை செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் பகுதியில் இருந்து கரும்புகளை அறுவடை செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக மண் பானைகள் குயவர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பொங்கலுக்கு பெயர்போன கரும்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே பிடாகம், மரகதபுரம், குச்சிப்பாளையம், வேலியம்பாக்கம், அத்தியூர்திருக்கை, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்தனர். இவை செழித்து வளர்ந்த நிலையில் இதனை தற்போது விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரும்புகள் அறுவடை
கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகள் மூலம் 6,05,752 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி கரும்பு தோட்டத்திற்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று மொத்தமாக கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கரும்புகளை அறுவடை செய்து அதனை மினி லாரி, லாரி, டிராக்டர்களில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஒரு ஏக்கருக்கு 190 கட்டுகள் (20 கரும்புகளை கொண்டது) ஒரு கட்டுக்கு ரூ.330 என்ற வீதத்தில் விவசாயிகளிடம் இருந்து அதிகாரிகள் கொள்முதல் செய்து அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு சில உள்ளூர் வியாபாரிகள், நேரடியாக கரும்பு தோட்டத்திற்கு வந்து விவசாயிகளிடம் விலைபேசி கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர்.
தட்டுப்பாடு
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஆண்டுதோறும் அறுவடை செய்யும் கரும்புகளை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் அனுப்புவோம். ஆனால் இந்த ஆண்டு அரசு சார்பில் ஒரு முழு கரும்பு வழங்குவதால் அவர்களே எங்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளிமாவட்டத்திற்கும், வெளிமாநிலத்திற்கும் அனுப்பவில்லை. அரசு கொள்முதல் செய்யும் கரும்புகளை தவிர மீதமுள்ள கரும்புகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்கவும் முடிவு செய்துள்ளோம்.
எங்களுக்கு ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு ரூ.1½ லட்சம் செலவாகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கி வருவதால் அரசே எங்களிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்வதால் எங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால் ஆட்கள் கூலி, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு, உர செலவு ஆகிய அனைத்துமே கூடியுள்ளதால் இனிவரும் காலங்களில் கரும்புக்கு விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றனர்.