ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக 21 வகையான பொங்கல் பரிசுத்தொகுப்பு தயார்

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக 21 வகையான பொங்கல் பரிசுத்தொகுப்பு தயார்படுத்தப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

Update: 2022-01-03 17:32 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக 21 வகையான பொங்கல் பரிசுத்தொகுப்பு தயார்படுத்தப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் துணிப்பையில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 305 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்பட 7 லட்சத்து 83 ஆயிரத்து 755 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசி பருப்பு, நெய் உள்பட 21 வகையான பொருட்களை பொட்டலமிட்டு வழங்கும் வகையில் அந்தந்த ரேஷன் கடைகளில் பணி நடைபெற்றது. பெண்கள் இந்த பணியில் ஈடுபட்டு தயார் படுத்தினார்கள். அதுபோல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக கரும்புகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைக்கப்பட்டு அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் ஏற்றி நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று முதல் வினியோகம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொருட்களை பொதுமக்கள் கூட்டம் கூடாமல் நெரிசல் இல்லாமல் வாங்கும் வகையில் ஏற்கனவே வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்தனர். ஒரு சில கடைகளில் வைத்தே டோக்கன் வழங்கப்பட்டன. நாளொன்றுக்கு 300 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுபோல் இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட உள்ளது. தகுதியின் அடிப்படையில் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவையும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

மேலும் செய்திகள்