கண்மாய், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
கண்மாய், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் நிலக்கோட்டை தாலுகா எம்.பூசாரிபட்டி, மல்லணம்பட்டி, எம்.குரும்பபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது எங்கள் கிராமங்களில் உள்ள கண்மாய்கள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு சோலார் நிறுவனம் அமைக்க முயற்சி நடக்கிறது.
இதனை தடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம் என்றனர். அப்போது கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்காத பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
325 மனுக்கள்
பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு கொடுக்க சிலரை மட்டும் அனுமதித்தனர். அதையடுத்து கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த மனு உள்பட நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 325 மனுக்கள் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.