திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம்,
பகல்பத்து உற்சவம்
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பகல்பத்து உற்சவம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் தேவநாதசாமி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு பூஜையும் நடந்தது. அதன்பிறகு பெருமாள், தேசிகர் சாமி புறப்பட்டு பகல் பத்து மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு, சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
13-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
இதனிடையே வருகிற 11-ந் தேதி ஸ்ரீ ஆண்டாள் நீராட்டல் 3 நாள் உற்சவமும், வருகிற 13-ந் தேதி போகி பண்டிகை அன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும் 13-ந்தேதி அன்று ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும், ராப்பத்து உற்சவமும் தொடங்க இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.