அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் பட்டதாரி தீக்குளிக்க முயற்சி-கிருஷ்ணகிரியில் பரபரப்பு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பட்டதாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
தீக்குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரியை அடுத்த உப்புக்குட்டையை சேர்ந்தவர் தசரதன் (வயது 34). பட்டதாரியான இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது தசரதன் கூறியதாவது:-
ரூ.7 லட்சம் பெற்று மோசடி
கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரும், சென்னை பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஒருவரும், என்னிடம் சென்னையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் பணம் கேட்டனர். நானும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் பணத்தை கொடுத்தேன். ஆனால் வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபோது, போலீசார் விசாரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.50 ஆயிரத்தை வாங்கி தந்தனர். மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறி இதுவரை தரவில்லை. இதனால் கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமலும், கடன் தொல்லையாலும் சிரமப்படுகிறேன். என்னுடைய பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.