திருச்செங்கோடு நகராட்சியில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைப்பு
திருச்செங்கோடு நகராட்சியில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைப்பு
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி மற்றும் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் உள்பட நகராட்சி பகுதியில் 332 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பல கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுகை தொகை உள்ளதாக தெரிகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் கணேசன் ஒரு வாரத்திற்குள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை செலுத்த வேண்டும், வரி நிலுவையை செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவுப்படி வாடகை கட்டாத கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதோடு, வரி கட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி நகராட்சி வருவாய் ஆய்வாளர் கோபி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று நகராட்சி பகுதியில் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சென்று கேட்டனர். அப்போது சிலர் நாளை (இன்று) கட்டுவதாக கூறினர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் அதிகப்படியான வாடகை பாக்கி வைத்திருந்ததோடு, கூடுதல் கால அவகாசம் கேட்ட 6 கடைகளை பூட்டி நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.