கொடிசியாவில் 700 படுக்கைகளுடன் மீண்டும் சிகிச்சை மையம்
கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளதால், கோவை கொடிசியாவில் 700 படுக்கைகளுடன் மீண்டும் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.
கோவை
கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளதால், கோவை கொடிசியாவில் 700 படுக்கைகளுடன் மீண்டும் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.
கொரோனா பரவல்
கோவையில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, கடந்த 2 ஆண்டுகளில் அறிகுறியின்றி தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக கோவை கொடிசியா, பாரதியார் பல்லைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், அரசு கலைக்கல்லூரி, காந்திபுரம் மாநகராட்சி திருமண மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்பின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, அந்த சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. அங்கு போடப்பட்ட கட்டில், மெத்தை மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
தற்காலிக சிகிச்சை மையங்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இதையொட்டி கோவையில் மீண்டும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி முதற்கட்டமாக கோவை கொடிசியாவில் உள்ள ‘டி’ மற்றும் ‘இ’ அரங்கில் 700 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆலோசனை
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
கோவையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால் தற்காலிக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துவது குறித்து கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்படி கோவை கொடிசியா, அரசு கலைக்கல்லூரி, தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரி, ராமநாதபுரம் மாநகராட்சி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் கொடிசியாவில் மட்டும் 700 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப தற்காலிக சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.