15 முதல் 18 வயது வரையுள்ள 51 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேனி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரையுள்ள 51 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
தேனி:
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 13 லட்சத்து 21 ஆயிரத்து 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 66 ஆயிரத்து 365 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 5 லட்சத்து 54 ஆயிரத்து 727 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வகுப்பறையில் வைத்தே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணியின் தொடக்க நிகழ்ச்சி தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
51 ஆயிரம் பேர்
அப்போது கலெக்டர் பேசுகையில், "15 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் 223 பள்ளிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் 51 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து செவிலியர்கள் பள்ளிகளுக்கு வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுபோல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.