விபத்துகளை தடுக்க வேண்டும்
ஈரோடு ஈ.பி.பி. நகர் மாரியம்மன் கோவில் தெருவில் 4 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இதனால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். விபத்துகளைத் தடுக்க உடனே வேகத்தடை அமைக்க வேண்டும்.
பாலு, ஈ.பி.பி.நகர், ஈரோடு.
கிணறு தூர்வாரப்படுமா?
நம்பியூர் தாலுகா கீழ் காந்திபுரத்தில் உள்ள கிணறு மற்றும் சாக்கடை பல மாதங்களாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. கிணற்றில் பக்கவாட்டு சுவரும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பல கால்நடைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளன. உடனே கிணறு, சாக்கடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ்குமார், காந்திபுரம்.
வேகத்தடை வேண்டும்
பெருந்துறை அருகே உள்ளது துடுப்பதி சாணார்பாளையம்-பாலக்கரை ரோடு. இங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாணார்பாளையம்.
ஆபத்தான மின்கம்பம்
பெருந்துறை கூனம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதிலுள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு.தமிழ்மதி, வெள்ளோடு.
வழிகாட்டி பலகை வைக்கப்படுமா?
மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் அருகே உள்ள ரிங்ரோட்டின் வழியாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு சரியான வழிகாட்டி பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், 46.புதூர்
புதர் மண்டிய அறிவிப்பு பலகை
ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடியில் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கிய குறிப்புகள் அடங்கிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி அறிவிப்பு பலகையை மறைத்தபடி காணப்படுகிறது. எனவே அறிவிப்பு பலகையை மறைத்தபடி காணப்படும் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி
பாராட்டு
பவானி தாலுகா தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்காடையம்பட்டியில் விநாயகர் கோவில் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு விநாயகர் கோவில் வீதி மற்றும் அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது 2 வீதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் எங்களது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி.
கோரிக்கை ஏற்பு
கோபி மொடச்சூர் செங்கோட்டையன் காலனியில் தெரு விளக்கு எரியாமல் இருந்து வந்தது. தெருவிளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தெருவிளக்கு ஒளிர்கிறது. இதனால் இருளாக இருந்த எங்கள் தெரு வெளிச்சமாக உள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் எங்களது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ச.மு.அர்ச்சனா, மொடச்சூர்.