ஈரோட்டில் குடியை மறக்க முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோட்டில், குடியை மறக்க முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
ஈரோட்டில், குடியை மறக்க முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியை மறக்க முடியவில்லை
ஈரோடு வீரப்பன்சத்திரம் நல்லி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் கவின்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் இவருடைய தந்தை கவின்குமாருக்கு, மாலை போட்டால் குடிக்காமல் இருப்பான் என்று நினைத்து கடந்த வாரம் அவருக்கு மாலை போட்டுள்ளார். இதனால் கவின்குமார் 3 நாட்கள் குடிக்காமல் இருந்துள்ளார்.
எனினும் கவின்குமாரால் குடியை மறக்க முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் அவர் குடித்துவிட்டார். சாமிக்கு மாலை போட்டு ஏன் குடிக்கிறாய் என்று ஆறுமுகம் கேட்டுள்ளார். அதற்கு கவின்குமார் தன்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறி உள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அதைத்தொடர்ந்து அனைவரும் தூங்கி விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பார்த்தபோது கவின்குமாரை காணவில்லை. தேடி பார்த்தபோது வீட்டின் பின்புறம் வாய்க்கால் அருகே உள்ள மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கவின்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.