அனுமன் ஜெயந்தி விழா: ஈரோடு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோடு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-01-02 22:21 GMT
ஈரோடு
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோடு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
1 லட்சத்து 8 வடை மாலை
அனுமன் ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு திருமஞ்சனமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. மதியம் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் கோவிலின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் ரூ.25, ரூ.100 சிறப்பு கட்டண தரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டது. கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்களுக்கு கிருமி நாசினி மருந்து வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார்கள்.
வெண்ணெய் காப்பு
இதேபோல் ஈரோடு கள்ளுக்கடைமேடு ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
ஈரோடு பெரியவலசு வலம்புரி ராஜவிநாயகர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி விழாவில் சுதர்ஷன யாகம் நடத்தப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் காரைவாய்க்காலில் உள்ள ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொல்லம்பாளையம்
ஈரோடு கொல்லம்பாளையம் குப்புசாமி காலனி பகுதியில் பிரசித்திபெற்ற விக்னராஜ கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நேற்று மாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் வடமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்