10 சதவீத வாக்குறுதிகளை கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை

தி.மு.க. அரசு 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் கூறினார்.

Update: 2022-01-02 21:09 GMT
விருதுநகர், 
 தி.மு.க. அரசு 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் கூறினார்.
வளர்ச்சிப்பணி
 விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:- 
 விருதுநகரில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தி.மு.க. அரசு கடந்த 8 மாதங்களில் அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. 300 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுபவர்கள் அது பற்றிய பட்டியலை கேட்டால் அதை தர தயாரில்லை.
 அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் ஜி.எஸ்.டி. மூலம் அரசின் வருமானம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பற்றிபேசாமல் மற்ற மத்தியஅமைச்சர்களை குற்றம் சாட்டியுள்ளார். மற்ற மாநிலங்களில் பெட்ரோல், விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்குறுதி அளித்தபடி குறைக்கப்படவில்லை. மூன்றில் ஒரு பங்கினருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரி 
 தி.மு.க. ஆட்சி காலத்தில் சிறு,குறு நடுத்தர தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மழை பாதிப்பால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு அ.தி.மு.க. ஆட்சியை முதல்-அமைச்சர் குறை கூறி வருகிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் கோட்டையில் இருந்த படியே அதிகாரிகளை களத்தில் இறக்கி வேலை வாங்கினார். அதுதான் நிர்வாக மேலாண்மை என்பது ஆகும்.
அதை விடுத்து களத்தில் நின்றால் மட்டும் போதாது. அதிகாரிகளை பணி செய்ய முடுக்கிவிட வேண்டும். தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்த பெருமை அ.தி.மு.க.வையே சாரும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டினார்கள். தற்போது எந்த முகத்தோடு அவரை வரவேற்க தயாராக உள்ளார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர நாம் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார். 
 முன்னதாக அவர் இந்நகர் தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்திலும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்