கர்நாடகத்தில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி - பசவராஜ் பொம்மை இன்று தொடங்கி வைக்கிறார்
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:
கோவேக்சின் தடுப்பூசி
கர்நாடகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) பெங்களூரு மூடலபாளையாவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார். அதே போல் அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பு மந்திரிகள், தாலுகாக்களில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
மாவட்ட கலெக்டர்கள் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மாநிலத்தில் 31¾ லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளில் 6 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் 16 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன.
சான்றிதழ்கள் பதிவிறக்கம்
அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அன்றைய தினம் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சிறுவர்கள், பிற நாட்களில் அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். இணை நோய் உள்ள சிறுவர்களுக்கு சுகாதார மையங்களில் டாக்டர்களின் மேற்பார்வையில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் சிறுவர்கள் கோவின் இணையதள பக்கத்தில் இருந்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படும் பள்ளிகள், தடுப்பூசி போட ஒரு தினத்தை முடிவு செய்து அந்த நாளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் தொழிலாளர் நலத்துறை மூலம் பள்ளிக்கு வரவழைக்கப்படுவார்கள். மத்திய அரசு இன்னும் ஒரிரு நாளில் கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களை கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கும். அரசு மையங்களில் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.