பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் விசாரணை கைதிகளுக்கு கூரியர் மூலம் கஞ்சா அனுப்பி வைப்பு
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளுக்கு கூரியர் மூலம் கஞ்சா அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
கைதிகளுக்கு கூரியரில் கஞ்சா
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சட்டவிரோதமாக கஞ்சா, போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். கைதிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளுக்கு தாராளமாக போதைப்பொருட்கள் மட்டும் கிடைத்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 விசாரணை கைதிகளுக்கு, கூரியரில் தனித்தனியாக பார்சல்கள் வந்திருந்தது. அந்த பார்சல்களில் கைதிகளான கரியப்பா, அபிஷேக் என்பவரின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. சிறையின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரரிடம், பார்சல்களை கொடுத்துவிட்டு கூரியர் ஊழியர் சென்றிருந்தார்.
கஞ்சா அனுப்பி வைப்பு
அந்த பார்சல்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, 2 பார்சல்களையும் போலீசார் பிரித்து பார்த்தார்கள். அப்போது கரியப்பா பெயரில் வந்திருந்த பார்சலில் 10 கிராம் கஞ்சாவும், அபிஷேக் பெயரில் வந்த பார்சலில் 150 கிராம் கஞ்சா இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த பார்சல்களை அனுப்பியவர்களின் பெயர் எதுவும் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து, விசாரணை கைதிகளான கரியப்பா, அபிஷேக்கை பிடித்து சிறை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 கைதிகளும் தங்களுக்கு பார்சலில் கஞ்சா வந்தது பற்றியும், கூரியர் அனுப்பியவர்கள் பற்றியும் எதுவும் தெரியாது எனக்கூறி விட்டனர். இதனால் கைதிகளுக்கு கஞ்சாவை அனுப்பியவர்கள் யார்? என்பது தெரியவில்லை.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து பரப்பனஅக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் சிறையில் பணியாற்றும் போலீஸ்காரர் புகார் அளிததார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைதிகளுக்கு கூரியர் வந்த தபால் நிலையத்திற்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் கூரியரில் கஞ்சா அனுப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். சிறை கைதிகளுக்கு கூரியரி்ல் கஞ்சா அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.