சேலத்தில் அனுமன் ஜெயந்தி விழா-பக்தர்கள் சாமி தரிசனம்

சேலத்தில் அனுமன் ஜெயந்திவிழாவையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-02 20:45 GMT
சேலம்:
சேலத்தில் அனுமன் ஜெயந்திவிழாவையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி விழா
சேலத்தில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நேற்று காலை பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பின்னர் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1,008 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரம்
இதே போன்று சேலம் பட்டை கோவில் எதிரே உள்ள ஸ்ரீவரசக்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் கோரிமேடு ஸ்ரீவீரபத்ர சவுபாக்கிய ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதே போன்று பால் மார்க்கெட் லட்சுமி நாராயணசாமி கோவில், ஜங்ஷனில் உள்ள ஆஞ்சநேயர், உடையாப்பட்டி கந்தாசிரமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், சின்னதிருப்பதியில் உள்ள வடக்கு முக வீர ஆஞ்சநேயர், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில் உள்ள ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அஸ்தம்பட்டி
சேலம் அஸ்தம்பட்டி லட்சுமி சுந்தரகணபதி கோவிலில் உள்ள சுந்தர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மேலும் சிறப்பு ஹோமங்களும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்