நெல்லைக்கு ரெயில் மூலம் 1,800 டன் யூரியா உரம் வருகை
நெல்லைக்கு ரெயில் மூலம் 1,800 டன் யூரியா உரம் வருகை
நெல்லை:
நெல்லைக்கு ரெயில் மூலம் 1,800 டன் யூரியா உர மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
உரம் தட்டுப்பாடு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் பிசான நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. பயிர் நல்லமுறையில் துளிர்த்து வளருவதற்கு யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் போதிய உரம் இருப்பு இல்லாமல் போனதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் உர மூட்டைகளின் விலையும் அதிகரித்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட வேளாண்மைத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் உரம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
1,800 டன் யூரியா
இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து யூரியா உரம் 1,800 டன் மூட்டைகள் ரெயில் மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த உர மூடைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.இதில் 1,100 டன் உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் நெல்லை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள 400 டன் உரம் 25 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
தென்காசி, தூத்துக்குடி
மீதமுள்ள 700 டன் உரம் தென்காசி மற்றும் தூத்துக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதுதவிர 700 டன் உரம் தனியார் நிறுவனத்தினர், உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர்.