சேலம் மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

சேலம் மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-02 20:40 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
பொங்கல் பரிசு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
அதன்படி மாவட்டத்தில் 10 லட்சத்து 57 ஆயிரத்து 998 ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 886 பேர் என மொத்தம் 10 லட்சத்து 58 ஆயிரத்து 884 குடும்பத்தினருக்கு ரூ.56 கோடியே 97 லட்சம் மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 21 பொருட்கள் இருக்கும்.
முன்னேற்பாடு பணிகள்
சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் பொன்னி கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்