வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு தூக்குப்போட்டு தலையாரி தற்கொலை

தான் சாக போவதாக வாட்ஸ்-அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பி விட்டு தலையாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-02 20:34 GMT
காரியாபட்டி,
தான் சாக போவதாக வாட்ஸ்-அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பி விட்டு தலையாரி தற்கொலை செய்து கொண்டார். 
தலையாரி தற்கொலை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள  பள்ளிமடத்தை சேர்ந்தவர் விநாயகசுந்தரம் (வயது 41). இவர் முத்தனேரி கிராம தலையாரியாக பணிபுரிந்து வந்தார். இவருடைய குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை இருந்து வருவதாகவும், இதற்கு பள்ளிமடத்தை சேர்ந்த பலர் தான் காரணம் என்றும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடந்த 31.12.2021 அன்று விநாயக சுந்தரம் வீடியோ பதிவு செய்தார். 
பின்னர் அந்த பதிவினை வாட்ஸ்-அப்பில் நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களிலும் அனுப்பி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பள்ளிமடத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். 
பிரேத பரிசோதனை 
இதையடுத்து விநாயக சுந்தரம் தற்கொலை செய்து கொண்டதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  திருச்சுழி போலீசார் விரைந்து வந்தனர். 
அவர்கள் விநாயக சுந்தரத்தின் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி லீலாவதி, திருச்சுழி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்