சேலத்தில் சோகம்: கல் குவாரி குட்டையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி-சிறுவனை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

சேலத்தில் சிறுவனை காப்பாற்ற முயன்றபோது கல் குவாரி குட்டையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-02 20:32 GMT
சேலம்:
சேலத்தில் சிறுவனை காப்பாற்ற முயன்றபோது கல் குவாரி குட்டையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ டிரைவர்
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நியாஸ் அகமது அலி (வயது 36). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று மதியம் டவுன் வ.உ.சி. மஜித் தெருவை சேர்ந்த பைசல் (12), ஆசிப்அலி (13), கவுசிக் (12) உள்பட 4 சிறுவர்களை தனது ஆட்டோவில் ஏற்றி கொண்டு சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள பழைய கல் குவாரி குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் பழைய கார் டியூப்பில் காற்று அடித்து சிறுவர்கள் குளித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சிறுவன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்தவுடன் கரையில் நின்று கொண்டிருந்த நியாஸ் அகமது அலி வேகமாக குட்டையில் இறங்கி அந்த சிறுவனை காப்பாற்றினார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
குட்டையில் மூழ்கி பலி
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவுடன் கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதேசமயம், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு வந்து குட்டையில் மூழ்கிய ஆட்டோ டிரைவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இறந்த நியாஸ் அகமது அலியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்துபோன ஆட்டோ டிரைவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல் குவாரி குட்டையில் குளித்து கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கியதால் அவனை காப்பாற்ற முயன்றபோது, ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்